Friday, April 12, 2024

“பாம்பு கடிக்கலீங்களா..?” – ரஜினியை சிரிக்க வைத்த நடிகர் அனு மோகனின் வசனம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த ‘வி.ஐ.பி.’ படத்தில் நடிகர் அனு மோகன் கோவை வட்டார மொழியில் பேசியதைக் கண்ட, சூப்பர் ஸ்டார் ரஜினி அவரை தனது அடுத்தப் படமான ‘படையப்பா’வில் நடிக்க வைத்திருக்கிறார். அந்தக் கதையை ஒரு பேட்டியில் இப்போது சொல்லியிருக்கிறார் நடிகர் அனு மோகன்.

“வி.ஐ.பி.’ படத்தில் நான் நடித்திருந்ததை பார்த்த ரஜினி ஸார் “எனது அடுத்தப் படத்தில் நீங்க நடிக்கிறீங்க…” என்று சொல்லிவிட்டுப் போனார். சொன்னது போலவே இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் இருந்து எனக்கு போன் வந்தது.

அப்போது ‘படையப்பா’ துவங்கிய நேரம். மொத்த யூனிட்டும் மைசூர் போய் சேர்ந்துட்டாங்க. மைசூர்ல இருந்துதான் எனக்கு போனும் வந்துச்சு. உடனே கிளம்பிப் போனேன்.

அப்போஅந்தப் படத்துல நடிகர், நடிகைகளே இரண்டு யூனிட்டா இருந்தாங்க. ஒரு பக்கம் ரஜினி ஸார் டீம். இன்னொரு பக்கம் நாசர் ஸார் டீம். ரஜினி ஸார் டீம்ல ஏற்கெனவே செந்தில், ரமேஷ் கண்ணா ரெண்டு பேரும் இருந்ததால நான் நாசர் ஸார் பக்கம் போறதா சொன்னேன்.

கே.எஸ்.ரவிக்குமார் கதையையெல்லாம் சொல்லிட்டு “இதுல எந்த மாதிரி உங்க கேரக்டர் இருக்கணுமோ நீங்களே முடிவு பண்ணிக்குங்க…” என்றார். நானே ஒரு இயக்குநர்ன்றதால அந்த உரிமையை எனக்குக் கொடுத்தார். நானும் யோசித்து “நாசர் ஸார் டீம்ல ஒரு எடுபிடியா வேலை பார்க்குற மாதிரி நடிக்கிறேன்”னு சொல்லிட்டேன்.

நான் நடிச்ச முதல் காட்சியே ரஜினி ஸாரோடதான். ‘படையப்பா’ டைட்டில் ஸாங்கை முடிச்சிட்டு ஒரு பாம்பையும் தைரியமா பிடிச்சிட்டு ரஜினி ஸார் வீட்டுக்குத் திரும்பி வருவாரு. நான் வாசல்ல நின்னு அவரை வரவேற்கணும். இதுதான் காட்சி.

கே.எஸ்.ரவிக்குமார் “இந்த சீன்ல நீங்க ஏதாவது வசனம் பேசி அவரைக் கூப்பிடுங்க…” என்றார். நானும் ரஜினி ஸாரும் எதிரில் நின்னபோது, ரஜினி என்னிடம், “அந்த ஸ்லாங்.. மறந்திராதீங்க” என்று கோவை பாஷையை ஞாபகப்படுத்தினார். நானும் அதே ஸ்லாங்கில், “ஏனுங்க.. பாம்பு புத்துக்குள்ள கையை விட்டீங்களே.. கடிக்கலீங்களா..?” என்று கேட்டேன். இதைக் கேட்டுட்டு ரஜினி ஸார் மட்டுமில்ல.. மொத்த யூனிட்டும் பட்டுன்னு சிரிச்சிருச்சு..

இதே வசனத்தை இன்னொரு தடவையும் வீட்டுக்குள் வந்த பின்னாடியும் நான் கேக்குற மாதிரி எடுத்தார் கே.எஸ்.ரவிக்குமார். மதியம் லன்ச் பிரேக்ல எனக்கு ஒரு யோசனை வந்துச்சு.. டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார்கிட்ட “எனக்கு இந்தப் படத்துல வேற எந்த வசனமும் வேணாம். படம் முழுக்க ரஜினி ஸாரை பார்க்கும்போதெல்லாம் நான் இதையே கேட்டுக்கிட்டிருக்கேன். நல்லாயிருக்கும்…” என்றேன். பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ரஜினி ஸார்.. இதைக் கேட்டு “நல்லாயிருக்கு” என்றார். அப்படியேதான் இந்தப் படம் முழுக்க அவரை விரட்டி, விரட்டி கேட்பேன்.

கடைசில நான் அவரைச் சந்திக்கிற கடைசி சீன் வந்துச்சு. அவர் ரம்யா கிருஷ்ணனை பார்க்க அவர் வீட்டுக்கு வருவார். அப்போ நான் அவரை வாசல்ல சந்திப்பேன். இதுதான் சீன். “இதுதான் உங்களுக்கு கடைசி சீனு”ன்னு டைரக்டர் சொன்னதால… “இப்போ நான் கேள்வி கேக்குறேன் ஸார்.. நீங்க என்ன பதில் சொல்வீங்க?”ன்னு ரஜினி ஸார்கிட்ட கேட்டேன். “நீங்க கேளுங்க.. சொல்றேன்”னாரு.. நானும் அதே மாதிரி கேட்டேன்.. உடனே பட்டுன்னு ரஜினி ஸார், “கடிச்சுச்சு.. ஆனா விஷம் ஏறலை”ன்னார். உடனே நான் அதுக்கு கவுண்ட் கொடுக்குற மாதிரி, “மேல போங்க.. அதைவிட பெரிய பாம்பு ஒண்ணு காத்துக்கிட்டிருக்கு”ன்னு சொன்னேன். இது அந்தக் காட்சிக்கே லீடான டயலாக்கா அமைஞ்சு போச்சு.

இந்தப் படம் வெளியான உடனேயே நானும் ரொம்ப பாப்புலராயிட்டேன். அதுக்குக் காரணம் ரஜினி ஸார்தான்..” என்றார் நடிகர் அனு மோகன்.

- Advertisement -

Read more

Local News