’லியோ’ படத்தின் வெற்றி விழா நேற்று நடந்துமுடிந்த நிலையில், தனது அடுத்த படத்தின் அறிவிப்பு வரும் வரை சமூக வலைதளங்களிலில் இருந்து ‘பிரேக்’ எடுத்துக் கொள்வதாக இயக்குநரும், ‘லியோ’ படத்தின் எழுத்தாளருமான ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.
விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நவ.01 நடைபெற்றது. இதில் விஜய், த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மிஷ்கின், அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மடோனா, படக்குழுவினர் மற்றும் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த விழா நடந்து முடிந்தவுடன் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ரத்னகுமார் “எழுத்துப் பணிக்காக ஆஃப்லைன் செல்கிறேன். எனது அடுத்த பட அறிவிப்பு வரும் வரை சமூக வலைதளங்களில் இருந்து பிரேக் எடுத்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
’லியோ’ வெற்றி விழாவில் ரத்னகுமார் பேசிய கருத்துகள் சர்ச்சையானதால்தான் அவர் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.