தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழும் லோகேஷ் கனகராஜ், மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி போன்ற கேங்ஸ்டர் திரைப்படங்களை இயக்கி தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார். அவருடைய அடுத்த படைப்பாக எந்த படம் வெளியாகும் என்ற ஆவல் ரசிகர்களிடையே நீண்ட நாட்களாக இருந்து வந்த நிலையில், தற்போது அவர் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார் என்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

சாணிக் காயிதம் மற்றும் கேப்டன் மில்லர் போன்ற திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய கேங்ஸ்டர் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்திற்காக அவர் சண்டை மற்றும் தற்காப்பு கலையில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார் எனவும், புதிய கெட்அப்பில் அவர் தோன்றப் போவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த அறிமுகப்படத்திற்காக லோகேஷ் கனகராஜ் ரூ.35 கோடி சம்பளம் பெறுகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தென்னிந்திய திரைப்பட உலகில் அதிக சம்பளம் பெறும் அறிமுக நடிகர்களில் ஒருவராக அவர் உயர்ந்துள்ளார்.
இயக்குநராக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றிப் படங்களை வழங்கிய லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகராக தன்னை மாற்றிக் கொள்வது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அவர் ஒரு ஹீரோவாக வெற்றி பெறுவாரா என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இதற்கிடையில், லோகேஷ் கனகராஜ் ஒரு மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படத்தை இயக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, பிரபாஸ் மற்றும் பவன் கல்யாண் இணைந்து நடிக்கும் ஒரு பிரமாண்டமான திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாக கூறப்படுகிறது. இந்த புதிய திட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

