1989ம் ஆண்டு ராம் கோபால் வர்மா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், நாகார்ஜுனா, அமலா, ரகுவரன் உள்ளிட்டோர் நடித்த ‘சிவா’ படம் தெலுங்குத் திரையுலகில் புதிய போக்கை உருவாக்கிய படம் எனக் கூறப்படுகிறது. இப்போது அந்த படம் டிஜிட்டல் வடிவத்தில் மறுவெளியீடாக (Re-release) திரையிடப்படுகிறது.இப்படத்தின் பத்திரிகையாளர் சிறப்பு காட்சிக்குப் பிறகு, இயக்குநர் ராம் கோபால் வர்மா மற்றும் நாகார்ஜுனா செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ராம் கோபால் வர்மா கூறியதாவது:

1972ல் வெளியான ப்ரூஸ் லீயின் ‘தி வே ஆப் டிராகன்’ (Return of the Dragon) படத்தில், ப்ரூஸ் லீ ரோம் நகருக்கு செல்கிறார். அங்கு ரெஸ்டாரன்டில் சில ரவுடிகளுடன் சண்டையிடும் காட்சி உள்ளது. நான் அந்த ரெஸ்டாரன்டை கல்லூரியாக மாற்றினேன். அதோடு என் சொந்த அனுபவங்களையும் சேர்த்தேன். இப்படித்தான் ‘சிவா’ கதையின் ஆரம்ப வரி பிறந்தது,” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “பல படங்கள் ஏதோ ஒரு படத்தின் காட்சியிலிருந்து அல்லது கதாபாத்திரத்திலிருந்து ஊக்கமெடுத்து உருவாகின்றன. ஆனால் அதை திரைக்கதையாக எப்படிச் சொல்கிறோம் என்பதில்தான் வெற்றி இருக்கும். அந்த விதத்தில் தான் ‘சிவா’ படம் வெற்றி பெற்றது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் மக்கள் அதைப் பற்றிப் பேசுகிறார்கள்,” என்றார்.

