ரஜினிகாந்த் நடித்த ‘அருணாச்சலம்’ படத்தை இயக்கியவர் சுந்தர்.சி. அந்த படம் வெளியாகி 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அவர் ரஜினிகாந்தை இயக்க உள்ளார். இது ரஜினிகாந்தின் 173வது படம். இப்படத்தை கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. குடும்ப உணர்வும் நகைச்சுவையும் கலந்த கதையாக இப்படம் உருவாகிறது.

இந்த நிலையில், சுந்தர்.சி அளித்த பேட்டியில் அவரிடம், அருணாச்சலம் படத்திற்குப் பிறகு ரஜினிகாந்தை மீண்டும் இயக்கப் போகிறீர்கள்; இதேபோல் ‘அன்பே சிவம்’ படத்திற்குப் பிறகு கமல்ஹாசனையும் இயக்குவீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
கமல்ஹாசனின் ‘சலங்கை ஒலி’ படத்தை பார்த்த பிறகு தான் சினிமாவுக்கு வர வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அதேபோல் அவர் நடித்த ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தை பார்த்த பிறகு தான் திரைக்கதை எழுதும் முறை குறித்து கற்றுக் கொண்டேன். அப்படிப்பட்ட கமல்ஹாசனை வைத்து தான் நான் ‘அன்பே சிவம்’ படத்தை இயக்கினேன்.இப்போது அவருடைய தயாரிப்பில் ரஜினிகாந்தின் 173வது படத்தை இயக்கப் போகிறேன். ரஜினிகாந்தை மீண்டும் இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இதுபோல ஒருநாள் கமல்ஹாசனையும் வைத்து மீண்டும் படம் இயக்க வாய்ப்பு வந்தால் அந்த வாய்ப்பை மிகச் சிறப்பாகப் பயன்படுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.

