இந்தியாவின் முதல் பார்முலா 1 பந்தய வீரர் கோயம்பத்தூரைச் சேர்ந்த நரேன் கார்த்திகேயன். அவரை மையமாகக் கொண்டு உருவாகும் பயோபிக் திரைப்படம் தமிழில் தயாராகவிருக்கிறது. இந்தப் படத்தை ‘‘டேக் ஆப்’’ மற்றும் ‘‘மாலிக்’’ படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்கவுள்ளார். ‘‘சூரரைப் போற்று’’ திரைப்படத்திற்கான திரைக்கதை எழுதிய ஷாலினி உஷாதேவி, இத்திரைப்படத்தின் கதையை எழுதுகிறார்.

நரேனின் பிள்ளைப் பருவம் முதல் அவரது வாழ்க்கையின் பல்வேறு வளர்ச்சி நிலையங்களைப் பதிவு செய்யும் வகையில் இந்த திரைப்படம் உருவாக இருக்கிறது. இந்த திட்டம் குறித்து நரேன் கார்த்திகேயனும் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்காலிகமாக ‘‘என்கே 370’’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் விரைவில் தயாரிக்கத் தொடங்கப்படும். இயக்குநர் மகேஷ், “நரேனின் பயணம் என்பது வெறும் மோட்டார் ரேஸிங் அல்ல; அது நம்பிக்கையின் விளிம்புகளைத் தொட்ட ஒன்று. உங்கள் மீது உங்கள் நாட்டின் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கையே இந்தக் கதையின் இருதயமாகும். அந்த நம்பிக்கையே என்னை இந்தப் படத்தில் ஈர்த்தது,” என தெரிவித்துள்ளார்.