இயக்குநர் சிகரம் என அழைக்கப்பட்டவர் பாலசந்தர். ரஜினியை அறிமுகப்படுத்தியவர், கமல் ஒரு ஹீரோவாக உருவாவதற்கு காரணமாக இருந்தவர்.
ஒருமுறை அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர் “ரஜினி, கமலிடம் நீங்கள் கண்டு வியந்த விஷயங்கள் பல இருக்கும். ஆனால் அவர்களின் குருவான உங்களுக்கு, அவர்களிடம் பிடிக்காத விஷயம் என்ன?” என்று கேட்டார்.
இதற்கு பாலசந்தர், “நான் இயக்கிய ‘நூற்றுக்கு நூறு’ படம் பார்த்திருப்பீர்கள். அதில் எல்லோருமே ஜெய்சங்கரை பெண் சபலம் உள்ளவராக பழி சொல்லுவார்கள். அவரைக் காதலிக்கும் லட்சுமியும் அதை நம்ப ஆரம்பித்துவிடுவார். ஒரு காட்சியில் நாகேஷ் வெள்ளைத்தாளில் பேனாவால் ஒரு புள்ளி வைத்துவிட்டு, ‘இது என்ன’ என்று கேட்பார். லட்சுமி, ‘கறுப்புப் புள்ளி’ என்பார்.
நாகேஷ், ‘ஏன் இவ்வளவு வெள்ளை இருக்கிறதே இது கண்ணுக்குத் தெரியவில்லையா’ என்பார்.
எங்கேயோ படித்ததைத்தான் இந்த காட்சியில் பயன்படுத்தி இருந்தேன். அப்படித்தான், மனிதன் என்றால் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்யும். அதை நாம் பெரிதுபடுத்தக்கூடாது. ரஜினி, கமலிடம் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதைத்தான் நான் பார்க்கிறேன்” என்றார்.
அசத்தலான பதில்தானே!