இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’. இப்படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் ரவி மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், தற்போது கடைசிக் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வரும் ஜனவரி 14 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதனிடையே, ‘பராசக்தி’ படத்தில் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளதாக ஜி.வி. பிரகாஷ் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த அப்டேட் ரசிகர்களிடையே யுவன் பாடியுள்ள பாடலின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

