தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், நடிகர் சிரஞ்சீவியின் மகனாகவும் விளங்கும் ராம் சரண், தீவிர ஐயப்ப பக்தராக அறியப்படுகிறார். அவர் அடிக்கடி விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று வழிபடுவது வழக்கமாக கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “என் தந்தையின் அறிவுரையின் பேரில் நான் 17 வயதில் ஐயப்ப விரதத்தை தொடங்கினேன். அந்த விரதம் என் வாழ்க்கையில் ஒழுக்கத்தை வளர்த்தது. என் சிந்தனைகளை கட்டுப்படுத்தவும், தேவையற்ற விஷயங்களில் இருந்து விலகி மன அமைதியை பெறவும் அது எனக்கு பெரிதும் உதவியது. என் தந்தையிடமிருந்து கடின உழைப்பின் முக்கியத்துவத்தை கற்றுக் கொண்டேன். மற்றவர்கள் 50 மணி நேரம் உழைத்தால், நீ 100 மணி நேரம் உழைக்க வேண்டும் என்ற தத்துவத்தை அவர் எனக்கு கற்றுக் கொடுத்தார்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இப்போது நான் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், ஒரு பொறுப்பான தந்தையாகவும் இருக்கிறேன். என் குழந்தைகள் வீட்டில் சுதந்திரமாக விளையாடும்போது அவர்களை நான் ஊக்குவிப்பேன். அவர்கள் விழுந்தாலும் மீண்டும் எழுந்து நிற்க கற்றுக் கொடுக்கிறேன். சேற்றில் விளையாடினாலும், ஏறி இறங்கினாலும் எனக்கு பயமில்லை. அவர்கள் சிறு வயதிலேயே தைரியமாகவும் துணிச்சலாகவும் வளர வேண்டும் என்று விரும்புகிறேன். அவர்களின் அம்மா மிகவும் மென்மையாக அவர்களை கவனித்துக் கொள்வார்; குழந்தைகள் குறித்த அக்கறை அவருக்கு அதிகம். அவர்கள் சுறுசுறுப்பாக இருந்தால், என்னிடம் வந்து சொல்லுவார்கள்,” என்று ராம் சரண் தனது குடும்ப வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொண்டார்.
