துல்கர் சல்மானை ஹீரோவாக வைத்து உருவான ‘காந்தா’ படத்தில், அவருக்கும் சீனியர் இயக்குனரான சமுத்திரக்கனிக்கும் இடையே ஏற்படும் ஈகோ மோதலே கதையின் மையம். நான் பெரிய ஹீரோ…சீன்கள் இப்படி இருக்க வேண்டும்” என்கிற துல்கர், உன்னை ஆளாக்கியது நான்… சொல்வதைச் செய் என்று பதிலளிக்கும் சமுத்திரக்கனி இருவரின் பிரச்னையில் புதிய ஹீரோயின் பாக்யஸ்ரீ சிக்கி தவிக்கிறார். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் பிரச்னை என்ற நிலை, படமே முடியுமா என தயாரிப்பாளர் குழு கவலைப்படும் சூழ்நிலை. இதற்கிடையில் ஹீரோ ஹீரோயின் காதலில் விழ, திருப்பதியில் ரகசியமாக திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள். அப்போது ஸ்டூடியோவில் இரவு நேரத்தில் ஒருவர் மர்மமாக சுட்டுக் கொலை செய்யப்படுகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணா விசாரணைக்கு வருகிறார். கொல்லப்பட்டவர் யார்? கொலை செய்தது யார்? காரணம் என்ன? குற்றவாளி சிக்கினாரா? இதுவே செல்வமணி செல்வராஜ் இயக்கிய ‘காந்தா’ படத்தின் கரு.

1950களின் சினிமா, ஸ்டூடியோ கலாசாரம், செட், ஸ்கிரிப்ட் முறைகள், அக்கால இயக்குனர்–ஹீரோ மோதல்கள், ஹீரோயின் காதல் போன்ற பின்னணியில் மாறுபட்ட கதையை சொல்ல முயன்றுள்ளார் இயக்குனர். இடைவேளைக்குப்பின் கதை துப்பறியும் திரில்லர் பாணிக்கு மாறுவது ரசிக்க வைக்கிறது. டி. கெ. மகாதேவன் என்ற காளை அழகு ஹீரோவாக நான் நடிகன்டா” என்று டயலாக் அடித்து சீனுக்கு சீன் கலக்கும் துல்கர சில நேரங்களில் எம்ஜிஆர், சில நேரங்களில் சிவாஜி, அக்கால ஹீரோக்களின் அலங்கார சாயலில் தோன்றினாலும், நடிப்பில் தனி லக்ஷணம் காட்டி கைதட்ட வைக்கிறார்.
சமுத்திரக்கனியுடன் செட்டில் மோதும் சீன், ஹீரோயினிடம் காதலை வெளிப்படுத்தும் சீன், நீளமான உணர்ச்சி வசனங்கள், குறிப்பாக கிளைமாக்ஸ் அனைத்திலும் முழு ஆழத்துடன் நடித்திருக்கிறார். பல விருதுகள் உறுதி என சொல்லலாம். தன்னை வளர்த்த நடிகன் மதிக்கவில்லை என்ற கோபத்தில் பொங்கி நிற்கும் ‘அய்யா’ என்ற இயக்குனராக சமுத்திரக்கனி பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார். அவரது கெட்அப், சிறு ரியாக்ஷன்கள் அனைத்தும் ரசனையாக உள்ளன. யார் இந்த ஹீரோயின்? என கேட்பார் போல பல காட்சிகளில் மனதை கொள்ளை கொள்கிறார் பாக்யஸ்ரீ. செட் சீன்களில் அவர் பேசும் வசனங்கள் சாவித்ரியை நினைவுபடுத்துகின்றன. துல்கர்–பாக்யஸ்ரீ காதல் சீன்கள், சமுத்திரக்கனி–பாக்யஸ்ரீ பாச சீன்கள் படத்தின் பலம். இடைவேளைக்குப்பின் அவருக்கான காட்சிகள் குறைவாக இருப்பது சிறிய குறை மட்டுமே.
இடைவேளைக்குப்பின் இன்ஸ்பெக்டராக வரும் ராணா நக்கல் டோனில் விசாரணை நடத்துவது புதுமையாக தெரிகிறது. 1950களின் சினிமா பின்னணியில், ஹீரோ உதவியாளராக வையாபுரி, உதவி இயக்குனராக கஜேஷ் நாகேஷ், துல்கரின் மனைவியாக காயத்ரி, மாமனாராக நிழல்கள் ரவி, போலீஸ் அதிகாரியாக ஆடுகளம் நரேன், ஸ்டூடியோ அதிபராக ரவீந்திர விஜய் அனைவரும் அக்கால உடை, கெட்அப்பில் சிறப்பாக நடித்துள்ளனர். பெரும்பாலான காட்சிகள் கருப்பு வெள்ளை டோனில் இருப்பதால் முகஅசைவுகள், எக்ஸ்பிரஷன்கள் மிகத் தெளிவாகவும் ரசனையாகவும் தெரிகின்றன. ஈகோ மோதல், பின்னர் கொலை திரில்லர் இரண்டையும் இணைத்து, எந்த பிரச்சனையாயினும் பேசினால் தீரும் என்ற நல்ல கருத்துடன் படத்தை முடிக்கிறார் இயக்குனர்.

