Saturday, April 13, 2024

எம் எஸ் விஸ்வநாதனின் இசையை கிண்டல் செய்த சந்திரபாபு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாடலாசிரியர்களில் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மிகவும் நெருங்கிய நண்பர் கண்ணதாசன் என்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆனால் பலர் அறியாத செய்தி நடிகர்களில் எம். எஸ். விஸ்வநாதனின் மிக நெருங்கிய நண்பர் சந்திரபாபு என்பது.

எப்போதும் மோதலில் ஆரம்பிக்கும் நட்பு மிகவும் நெருக்கமான நட்பாக இருக்கும் என்பார்கள் அதற்கு இன்னொரு உதாரணம்தான் எம். எஸ். விஸ்வநாதன்-சந்திரபாபு  ஆகிய இருவரின் நட்பும்.

அப்போது சென்ட்ரல் ஸ்டுடியோவில் இசையமைப்பாளர் எம். எஸ். சுப்பையா நாயுடு அவர்களிடம்  உதவியாளராக  வேலை செய்து கொண்டிருந்தார்  எம். எஸ். விஸ்வநாதன்.

பாடுவதற்கு வாய்ப்பு கேட்டு யார் வந்தாலும் சுப்பையா நாயுடு வாய்ஸ் டெஸ்ட் எடுக்கும்படி விஸ்வநாதனிடம்தான் அனுப்பி வைப்பார் . இந்தச் சூழ்நிலையில்தான் சினிமாவில் எந்தத் துறையிலாவது ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று அலைந்து கொண்டிருந்த சந்திரபாபு பாடுவதற்கு வாய்ப்பு கேட்டு எம். எஸ். சுப்பையா நாயுடுவை சந்தித்தார்.

உடனே விஸ்வநாதனை அழைத்த சுப்பையா நாயுடு. “இந்தப் பையன் பாடறதுக்கு சான்ஸ் கேட்டு வந்திருக்கான்.இவனுக்கு வாய்ஸ் டெஸ்ட் எடுத்துப் பாரு” என்று சொல்லி சந்திரபாபுவை அவருடன் அனுப்பி வைத்தார்.

விஸ்வநாதன் ஆர்மோனியம் வாசிக்க தனக்குத் தெரிந்த தமிழ்ப் பாடல்களை எல்லாம் பாடினார் சந்திரபாபு. சில வருடங்கள் இலங்கையில் இருந்ததால் சந்திரபாபுவின் தமிழ் உச்சரிப்பில் கொஞ்சம் சிங்களம் கலந்திருந்தது.

சிறிது நேரம் சென்றபின் அங்கே வந்த சுப்பையா நாயுடு “என்னப்பா டெஸ்ட் எடுத்தியா? எப்படி பாடறான் பையன் ?” என்று கேட்க “எங்கே பாடறாரு? எல்லா பாட்டையும் வசனமா சொல்றாரு. அதுவும் தமிழ்ல இல்லே” என்று சந்திரபாபுவை வைத்துக் கொண்டே அவரிடம் கூறினார் விஸ்வநாதன்.

இப்படி அவர் சொன்னவுடன் சந்திரபாபுவுக்கு பாடுவதற்கு எங்கே வாய்ப்பு கிடைக்கும்?

“நல்லா பிராக்டிஸ் பண்ணிட்டு அப்புறமா வந்து பாருப்பா” என்று சொல்லி சந்திரபாபுவை திருப்பி அனுப்பிவிட்டார் சுப்பையா நாயுடு.

திரும்பிப் போகும்போது சந்திரபாபு சும்மா போகவில்லை . விஸ்வநாதனை அப்படியே எரித்து விடுவது போல ஒரு கோபப் பார்வை பார்த்துவிட்டு சென்றார்.   

இந்தச்  சம்பவம் நடந்த சில வருடங்களில் எம். எஸ். விஸ்வநாதன் தமிழ்ப் பட உலகில் மிகப் பெரிய இசையமைப்பாளராக உயர்ந்தார். அதேபோல சந்திரபாபுவும் தனது திறமையால் முன்னுக்கு வந்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றார். அவர் நடித்த படங்களில்  அவர் பாடிய பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால்  அவர் நடித்த எல்லா படங்களிலும் அவரை பாட வைக்க  தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் விரும்பினர்.

எம். ஜி. ஆர். நடித்த “குலேபகாவலி” படத்தில் எம். ஜி. ஆரின் நண்பராக ஒரு முக்கியமான வேடத்தில் நடித்தார் சந்திரபாபு. அந்தப் படத்தில்  சந்திரபாபுவின்  பாடல் ஒன்று இடம் பெற்றால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய “குலேபகாவலி” படத்தின் இயக்குனர் ராமண்ணா அப்படி ஒரு பாடலுக்கு இசையமைக்கும்படி அப்படத்திற்கு இசையமைப்பாளர்களாகப் பணியாற்றிய   விஸ்வநாதன்- ராமமூர்த்தி ஆகிய இருவரையும் கேட்டுக் கொண்டார்.  

அந்தப்பாடலுக்கு அவர்கள் இசையமைத்து முடித்ததும் தான் பாட வேண்டிய பாடலுக்கான டியூனை கேட்பதற்காக ராமண்ணாவின் அலுவலகத்திற்கு வந்தார் சந்திரபாபு.

அவர் வந்தவுடன் அவர் பாட வேண்டிய பாடலுக்கான டியூனை விஸ்வநாதன் ஹார்மோனியத்தில் வாசித்தார்

முகத்தில் எந்தச்  சலனமும் இன்றி அந்த டியூனை கேட்ட சந்திரபாபு விஸ்வநாதன் வாசித்து முடித்ததும் “என்ன மெட்டு இது?” என்றார்.

அவரது கேள்வியில் இருந்த கேலியும் கிண்டலும் எல்லோரையும் எதிர்ச்சி அடைய வைத்தது.  அதைப்பற்றி எல்லாம் சிறிதும் கவலைப்படாமல் ”இந்த காட்சியில நான் பாடி ஆடணும். ஆனா இந்த மெட்டுக்கு நான் எப்படி டான்ஸ் ஆட முடியும்? டான்ஸ் ஆட இந்த மெட்டில் என்ன இருக்கு?” என்று சரமாரியாக படத்தின் இயக்குனரான ராமண்ணாவைப் பார்த்து தொடர்ந்து கேள்விகள்   கேட்டார் சந்திரபாபு.

அந்தப் பாட்டிற்கு மிகவும் அருமையாக மெட்டமைத்திருந்தார் எம் எஸ் விசுவநாதன். அப்படி இருக்கும்போது சந்திரபாபு அந்த பாட்டைப்பற்றி ஏன் அவ்வளவு கேவலமாகப் பேசுகிறார் என்று ஒருவருக்கும் புரியவில்லை .  

சென்ட்ரல் ஸ்டுடியோவில் வாய்ஸ் டெஸ்ட்டுக்காக சந்திரபாபு வந்த போது “எங்கே பாடறாரு? எல்லா பாட்டையும் வசனமா சொல்றாரு” என்று  தான் எஸ் எம் சுப்பையா நாயுடு அவர்களிடம் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு அதற்குப் பழி வாங்குவதற்காகத்தான் சந்திரபாபு தனது மெட்டைக் குறை கூறுகிறார் என்ற விஷயம்  விஸ்வநாதனுக்கு மட்டும் தெளிவாகப் புரிந்தது.

என்னதான் சந்திரபாபு மிகப் பெரிய நடிகராக உயர்ந்து  இருந்தாலும் தன்னிடம் வாய்ஸ் டெஸ்ட்டிற்கு வந்து தன்னால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் தான் போட்ட மெட்டு சரியில்லை என்றும் தனக்கு இசையமைக்கவே தெரியவில்லை என்றும் கூறினால் எந்த இசையமைப்பாளராக இருந்தாலும் அடுத்து என்ன செய்வார்? 

“இந்த நடிகர் பாடும் பாட்டுக்கெல்லாம் என்னால் இசையமைக்க முடியாது. அதையும் மீறி உங்களுக்கு அவர் வேண்டுமென்றால் அவரை தாராளமாக வைத்துக் கொள்ளுங்கள். நான் இந்த படத்திலிருந்து விலகிக் கொள்கிறேன்” என்றுதான்  சொல்வார்.

ஆனால் எம் எஸ் விஸ்வநாதன் அதைச் செய்யவில்லை. தன்னுடன் பாடல் கம்போசிங்கிற்கு வந்திருந்த வாத்தியக் கலைஞர்களிடம் தான்  போட்டிருந்த டியூனை வாசிக்கச் சொன்னார்.

எழுந்து வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்ட அவர்  அந்த டியூனுக்கு ஏற்ப நடனம் ஆடத் தொடங்கினார்.வழுவூர் ராமையா பிள்ளையிடம்  நடனம் கற்றுக் கொண்டவர் என்பதால் அந்த மெட்டுக்கு ஏற்ப அமர்க்களமாக அவர் ஆடியதைப் பார்த்து சந்திரபாபு மட்டுமல்ல அந்த கம்போசிங் அறையில் இருந்த அனைவரும் திகைத்துப் போனார்கள்

அடுத்து சந்திரபாபு என்ன செய்தார் தெரியுமா ?

ஓடிவந்து எம்.எஸ்.விஸ்வநாதனை அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டது மட்டுமின்றி அவரை  அப்படியே தூக்கிக் கொண்டு தட்டாமாலை சுற்றினார்.

அதோடு நில்லாமல் “நீ கலைஞன்டா” என்று விஸ்வநாதனின் கன்னத்தைக் கிள்ளியபடி அவரைக்  கொஞ்சித்  தீர்த்துவிட்டார்.

“குலேபகாவலி” படத்திலே  இணைந்த அவர்கள் இருவரும் அதற்குப் பிறகு இணை பிரியா நண்பர்களானார்கள். நாளடைவில் விஸ்வநாதனின் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் ஆனார் சந்திரபாபு.

மிக நெருக்கமான நண்பர்களாக இருந்த போதிலும் பாடல் என்று வந்துவிட்டால் விஸ்வநாதனும் விட்டுக் கொடுக்க மாட்டார். சந்திரபாபுவும் விட்டுக் கொடுக்க மாட்டார்.

கண்ணதாசன் தயாரித்த “கவலை இல்லாத மனிதன்” படத்திலே தான் பாடுகின்ற மாதிரி ஒரு தத்துவப் பாடல் வேண்டும் என்று ஆசைப்பட்டார் சந்திரபாபு. அந்த சந்தர்ப்பத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அகால மரணம் அடைந்திருந்ததால்  அவர் மறைவால் மனதளவில் பெரிதாக பாதிக்கப் பட்டிருந்த கண்ணதாசன் பாடல் எழுதுவதிலேயே ஆர்வம் இல்லாதவராக இருந்தார்.

பின்னர் சந்திரபாபு வேண்டிக் கேட்டுக் கொண்டதின் பேரில் அவர் எழுதிய பாடல்தான் “பிறக்கும் போதும் அழுகின்றாய், இறக்கும் போதும் அழுகின்றாய்,              ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே” என்ற பாடல்

அந்தப் பாடலுக்கு இசையமைத்த விஸ்வநாதன் அந்த மெட்டை சந்திரபாபுவிற்கு சொல்லிக் கொடுத்துவிட்டு பாடல் பதிவிற்குத் தயாரானார் 

டேக் ஒன்று,இரண்டு,மூன்று என்று போய்க்கொண்டேயிருந்தது. ஆனால் என்ன காரணத்தாலோ விஸ்வநாதன் எதிர்பார்த்தபடி சந்திரபாபுவால் அன்று அந்தப் பாடலைப்  பாட முடியவில்லை

சலிப்போடு “இந்த மாதிரி பாட்டுக்கெல்லாம நீ லாயக்கில்லடா” என்றார் விஸ்வநாதன்

ஆத்திரத்தில் தான் போட்டிருந்த பனியனை கழட்டிப் போட்டுவிட்டு மீண்டும் பாடத் தொடங்கினார் சந்திரபாபு. அந்த டேக்கும் சரியாக வரவில்லை

உடனே “என்னால் இனிமேல் பாட முடியாது” என்று உரக்கச் சொல்லிவிட்டு காரை எடுத்துக் கொண்டு ஸ்டுடியோவை விட்டுக் கிளம்பி விட்டார் சந்திரபாபு

பின்னர் இன்னொரு காரை எடுத்துக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்த விஸ்வநாதன். அவரை சமாதானப்படுத்தி ஸ்டுடியோவிற்கு அழைத்துக் கொண்டு வந்து அந்தப் பாடலைப் பாட வைத்தார்

அந்தப் பாடலை அப்போது நமது நாட்டின் ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் முன்னாலே பாடக்கூடிய வாய்ப்பு ஒரு முறை சந்திரபாபுவுக்குக் கிடைத்தது

தன்னை மறந்து அந்தப்பாடலை ரசித்த ஜனாதிபதி “பிரமாதம் பிரமாதம்” என்று மனமார அந்தப் பாடலைப் பாராட்டினார்

அவர் அப்படி பாராட்டிய அடுத்த நிமிடம் சந்திரபாபு தனது நாற்காலியில் இருந்து துள்ளிக் குதித்துக் கொண்டு ஜனாதிபதி அருகில் சென்றார்.

ஜனாதிபதியின் பாதுகாவலர்கள்  அவரைத் தடுத்து நிறுத்துவதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் மடியில் போய் அமர்ந்து கொண்ட சந்திரபாபு அவர் தோளில் கையைப் போட்டார். பின்னர் அவரது கன்னத்தைத் தடவியபடி “கண்ணா நீ ரசிகன்டா” என்றார்

ஜனாதிபதி அருகில் செல்வதற்கே பல விதி முறைகள்  உண்டு . ஆனால் சந்திரபாபுவோ அவரது மடியிலேயே அமர்ந்திருந்தார் . அங்கிருந்த பாதுகாவலர்களுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை

ஆனால் அவ்வளவு உயரிய பதவியில் இருந்தும் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் அவர்கள் சந்திரபாபுவின் செய்கையால் எந்த ஆத்திரமும் அடையாதது மட்டுமல்ல சந்திரபாபுவை தட்டிக் கொடுத்துப் பாராட்டினார்

அதன் பின்னர் வாழ்க்கையில் பல சோதனைகளை சந்தித்த  சந்திரபாபு மரணத்தின் பிடியில் இருந்தபோது தன்னுடைய மரணம் பற்றி எம். எஸ். விஸ்வநாதனுக்கு மட்டுமே முதலில் தகவல் தர வேண்டும் என்றும் தன்னைக்  கல்லறையில் புதைப்பதற்கு முன்னாலே விஸ்வநாதன் இல்லத்தில் சில நிமிடங்களாவது தனது உடலை வைத்துவிட்டு பிறகே அடக்கம் செய்ய வேண்டும் என்றும் சொல்லிவிட்டு அதன் பிறகே இறந்தார்.

1974 ஆம் ஆண்டு மார்ச்  8 ஆம் தேதி சந்திரபாபு இறந்த போது சாந்தோம் சர்ச்சிற்கு எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல் அவரது விருப்பப்படி விஸ்வநாதன் இல்லத்தில் வைக்கப்பட்டு அதற்குப் பிறகே பட்டினப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

- Advertisement -

Read more

Local News