Tuesday, November 19, 2024

‘மழை பிடிக்காத மனிதன் ‘ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனது அடையாளத்தை மறந்து வேறு ஒரு ஊரில் வசிக்கும் ஒரு நாயகனைப் பற்றிய கதை. இதே பாணியில் தமிழ் சினிமாவில் இதற்கு முன்பும் சில படங்களைப் பார்த்திருக்கலாம். தமிழ் சினிமாவில் அதிகம் காட்டப்படாத அந்தமான் தீவுகளை இந்தப் படத்தின் கதைக்களமாக வைத்துள்ளார் இயக்குனர். படத்தின் டிரைலரைப் பார்த்த போது ஏதோ ஒரு அதிரடி த்ரில்லர் படம் எனத் தோன்றியது. ஆனால், படத்தில் நாயகனுக்கும், வில்லனுக்குமான மோதல் மட்டுமே கதை என்பது ஏமாற்றத்தைத் தருகிறது.

சீக்ரெட் ஏஜன்ட் ஆக இருப்பவர் விஜய் ஆண்டனி. அவருடைய மேலதிகாரி சரத்குமாரின் தங்கையைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர். அமைச்சர் ஒருவர் விஜய் ஆண்டனியைப் பழிவாங்க நடத்திய தாக்குதலில் விஜய் ஆண்டனியின் மனைவியும், அவரது நண்பர்கள் சிலரும் கொல்லப்படுகிறார்கள். விஜய் ஆண்டனியும் அதில் இறந்துவிட்டார் என்று சொல்லிவிட்டு அவரை அந்தமான் தீவில் ஒரு ஊரில் இருக்க வைக்கிறார் சரத்குமார். அந்த ஊரில் வட்டிக்கு பணம் கொடுத்து தராதவர்களை கொலை செய்வதை வழக்கமாக வைத்திருக்கும் தனஞ்செயாவுக்கும், விஜய் ஆண்டனிக்கும் மோதல் வருகிறது. அதில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

எப்போதுமே ஒரு சோகமான முகம், கொஞ்சம் நீளமான தலைமுடி, அதன் மேல் ஒரு நீளமான தொப்பி என படம் முழுவதும் தளர்வான தோற்றத்தில் இருக்கிறார். ஆனால், சண்டைக் காட்சி என்று வந்துவிட்டால் அதிரடி காட்டுகிறார். இரண்டு, மூன்று சண்டைக் காட்சிகள் படத்தில் அசத்தலாக அமைந்துள்ளன. அவற்றில் புதிய விஜய் ஆண்டனியை பார்க்க முடிகிறது. மற்ற காட்சிகளில் வழக்கமான அதே விஜய் ஆண்டனிதான் வந்து போகிறார்.

மழையில் தவித்த ஒரு நாய்க்குட்டியைக் காப்பாற்றுகிறார் விஜய் ஆண்டனி. அதனால், நாயகி மேகா ஆகாஷ் அறிமுகம் கிடைக்கிறது. நட்பாக ஆரம்பித்து அப்படியே காதலாக மாறுகிறது.அந்தமான் தீவில் விஜய் ஆண்டனிக்கு நண்பனாக கிடைக்கிறார் பிருத்வி அம்பர். பிருத்வியின் அம்மா சரண்யா பொன்வண்ணன் ஹோட்டல் நடத்துகிறார். அம்மாவும், மகனும் விஜய் ஆண்டனி மீது பாசமாக இருக்கிறார்கள். சரண்யா வழக்கம் போல பாச நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பிருத்வி துள்ளலாக நடிக்கிறேன் என கொஞ்சம் அதிகமாக நடித்துள்ளார்.

வில்லனாக கன்னட நடிகர் தனஞ்செயா. தமிழ் சினிமாவில் ஏற்கெனவே பல படங்களில் பார்த்த அதே வில்லன் கதாபாத்திரம்தான். வட்டிக்குப் பணம் வாங்கி திருப்பித் தராதவர்களை காபியில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்கிறார். அந்தமான் தீவில் இருக்கும் காவல் துறை அவற்றை கண்டு கொள்வதேயில்லை போலிருக்கிறது.போலீஸ் அதிகாரியாக முரளி சர்மா. அவருக்கும் வில்லனுக்கும் மோதல் ஏற்படுகிறது. தனஞ்செயாவை ஏதோ செய்யப் போகிறார் என்று பார்த்தால் வில்லனுடன் சேர்ந்து கொண்டு விஜய் ஆண்டனியை எதிர்க்கிறார்.‌ சரத்குமார், சத்யராஜ் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். இருவரும் இணைந்து ஏதோ செய்யப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு வந்து போகிறது. ஒருவேளை இரண்டாம் பாகத்தில் செய்வார்களோ ?.நாயகன் – வில்லன் மோதல்தான் கதை. ஆனால், கூடவே பல கிளைக் கதைகள் வந்து போவதால் மையக் கதையின் தாக்கம் குறைந்து போகிறது. சீக்ரெட் ஏஜன்ட் ஒரு லோக்கல் தாதாவுடன் மோதி அந்த சீக்ரெட் ஏஜன்ட்டின் வேலையையே மோசமாக்கிவிட்டார் இயக்குனர்.

அச்சு ராஜாமணி, விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார்கள். அந்தமான் தீவு என சில இடங்களை மட்டும் காட்டிவிட்டு மீதி இடங்களை செட் போட்டு எடுத்திருக்கிறார்கள். சண்டைக் காட்சிகளை அமைத்துள்ள சுப்ரீம் சுந்தர், மகேஷ் மாத்யு, கெவின் குமார் ஆகியோருக்கு மட்டும் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.தனது மனைவியை ஒரு மழை நாளில் இழந்ததால் ‘மழை பிடிக்காத மனிதன்’ ஆகிவிடுகிறார் விஜய் ஆண்டனி. ஓடிடி வந்த பிறகு கொரியன் க்ரைம் தொடர்களை பார்ப்பது கூட நமது தாய்க்குலங்களுக்கு வழக்கமாகிவிட்டது. அப்படியென்றால் ஒரு சீக்ரெட் ஏஜன்ட் கதையை எப்படி எடுத்திருக்க வேண்டும்.

- Advertisement -

Read more

Local News