Wednesday, September 4, 2024

தயவுசெய்து வதந்திகளை பரப்ப வேண்டாம்… வருத்தம் தெரிவித்த நடிகர் சூரி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்தவர் நடிகர் சூரி. இவருக்கு சொந்தமாக மதுரையில் பல இடங்களில் ‘அம்மன்’ என்ற உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு கிளை அரசு மருத்துவமனையிலும் இயங்குகிறது. மற்ற கிளைகளில் உள்ள உணவின் விலையைவிட இங்கு உணவு குறைந்த விலையில் விற்கப்படுகிறது.

மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு சில தொண்டு நிறுவனங்கள் உணவு வழங்கி வந்தன. இதனால் சில சண்டைகள், சச்சரவுகள், சுகாதார பிரச்சனைகள் எழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில், மருத்துவமனையின் உள்ளே சென்று தொண்டு நிறுவனங்கள் உணவு வழங்க தடை விதிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்த நிலையில், இப்படி ஒரு தடை உத்தரவு வர காரணம் நடிகர் சூரி மற்றும் அவரது ‘அம்மன்’ உணவக குழுவினர்தான் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், சூரி இதை மறுத்து உள்ளார்.

சூரி அளித்த பேட்டியில், அம்மன் ஹோட்டல் குழுமம் மீது நான்கு நாட்களாக தவறான தகவல்கள் பரவுகின்றன. இதற்கு என்ன காரணம் என எனக்கு புரியவில்லை. மதுரை அரசு மருத்துவமனையில் சில தன்னார்வலர்கள் வழங்கும் அன்னதானத்தால் நாய்கள் சுற்றி திரிவது, உணவு வீணாவதால் சுகாதார பிரச்சனைகள் போன்றவை ஏற்பட்டன. இதனால், மாவட்ட நிர்வாகமும், அரசு மருத்துவமனை நிர்வாகமும் மருத்துவமனை வளாகத்திற்குள் அன்னதானம் வழங்க தடை விதித்துள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு வெளியில் அன்னதானம் வழங்கலாம் எனக் கூறியுள்ளனர். இந்த பிரச்சனைக்கும், மதுரை அரசு மருத்துவமனையில் சேவை நோக்கத்திற்காக திறக்கப்பட்ட ‘அம்மன்’ ஹோட்டல் நிர்வாகத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.

“என் அம்மா ஒரு முறை மருத்துவமனைக்குச் சென்று அங்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டதை பார்த்து, காசு செலவைப் பார்க்காமல் அங்கு தரமான உணவு குறைந்த விலையில் வழங்கும்படி கேட்டுக்கொண்டார். அப்போது, அரசு மருத்துவமனையில் ஹோட்டல் நடத்தும் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டதால், லாப நோக்கம் பார்க்காமல், குறைந்த விலையில் தரமான உணவு அங்கு வழங்கப்படுகிறது. தற்போது அங்கு மருந்து கொடுப்பவரும், மருந்து வாங்குபவரும், டாக்டர்களும், நோயாளிகளும் ஒரே நேரத்தில் அமர்ந்து உணவு எடுக்கும் நிலை உள்ளது.

அந்த அளவிற்கு சேவை மனப்பான்மையோடு உணவு வழங்கும் நான், மற்றவர்களுக்கு உணவு வழங்குவதை ‘அம்மன்’ ஹோட்டல் குழுமம் தடுக்குமா? இந்த விஷயத்தில் தேவையில்லாமல் ‘சூரியன்’ ஓட்டல் என்ற பெயருக்காக சிலர் வீணான வதந்திகளை கிளப்பி வருகின்றனர். இது எனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனையில் அன்னதானம் வழங்க தடை விதித்ததற்கும், எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பது மட்டுமே உண்மை” என சூரி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News