கேரளாவில் சூர்யாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார் ‘ஆர்.டி.எக்ஸ்’ இயக்குநர் நகாஸ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துக் கொண்டிருக்கும் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 2D நிறுவனம் தயாரிக்கிறது. அந்தமான், ஊட்டி, சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படக்குழு சூர்யாவை வைத்து சில காட்சிகளை படமாக்க கேரளா சென்றிருந்தபோது, ‘ஆர்.டி.எக்ஸ்’ இயக்குநர் நகாஸ் சூர்யாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, ‘ஆர்.டி.எக்ஸ்’ தனது மிக விரும்பிய படம் என்று சூர்யா தெரிவித்திருக்கிறார். இந்தக் கூட்டணியின் திடீர் சந்திப்பு குறித்து திரையுலகில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இந்த கூட்டணி விரைவில் இணையும் எனவும், இதுவே அதற்கான முதற்கட்ட சந்திப்பாகும் என்றும் கூறப்படுகிறது. சூர்யாவுக்காக உருவாக்கப்பட்ட ஆக்சன் கதையின் முன்னோட்டத்தை மட்டும் நகாஸ் அவரிடம் தெரிவித்துள்ளார். விரைவில் முழுமையான கதையையும் தெரிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
‘ஆர்.டி.எக்ஸ்’ இயக்குநர் தனது சமூக வலைதள பதிவில், “எனது அபிமான நாயகன் சூர்யாவை சந்தித்தது ஒரு கனவு நினைவாகும். அவரது பணி எப்போதும் எனக்கு ஊக்கமளித்துள்ளது. அவர் ‘ஆர்.டி.எக்ஸ்’ படத்தை மிகவும் ரசித்தார் என்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு. சூர்யாவை சந்தித்த தருணம் எனக்குப் பெரும் மகிழ்ச்சியாகும்” என குறிப்பிட்டுள்ளார்.